நம்சூசு போர்த்தொடர்
நம்சூசு போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
நார்வே போர்த்தொடரின் பகுதி | |||||||
நம்சூசு நகரின் இடிபாடிகளிடையே நேச நாட்டுப் படைவீரர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் பிரான்சு நோர்வே | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஏட்ரியன் டி வியார்ட் சில்வெஸ்டர்-கெரார்ட் ஆடே ஓலே பெர்க் கெட்சு[1][2] | - | ||||||
பலம் | |||||||
3,500 பிரித்தானியர்கள் 2,500 பிரெஞ்சுக்காரர்கள் 500 நார்வீஜியர்கள் | 6,000 |
நம்சூசு போர்த்தொடர் (Namsos Campaign) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நிகழ்ந்த ஒரு போர்த்தொடர். நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் நார்வேயின் துரொன்ஹெய்ம் நகரைக் கைப்பற்ற முயன்று தோற்றன.
ஏப்ரல் 9, 1940ல் நார்வே மீதான ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கியது. கடல்வழியாகவும், வான்வழியாகவும் நார்வே மீது ஜெர்மானியப் படைகள் தாக்குதல் தொடுத்தன. அதுவரை நடுநிலை நாடாக இருந்து வந்த நார்வே, இத்தாக்குதலை எதிர்கொள்ள நேச நாடுகளின் உதவியைக் கோரியது. நேச நாட்டுப் படைகளும் நார்வேயில் தரையிறங்கின. நார்வேயின் முக்கிய நகரங்களான ஓஸ்லோ, பேர்கன், துரோன்ஹெய்ம் ஆகிய நகரங்களை ஜெர்மானியப் படைகள் விரைவில் கைப்பற்றின. நார்வேயின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஜெர்மானியப் படைகள் முன்னேறுவதைத் தடுக்க துரோன்ஹெய்ம் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். நார்வேயின் புவியியல் அமைப்பு துரோன்ஹெய்ம் அருகே கிழக்கு-மேற்காகக் குறுகுவதால், அரண்நிலைகளை அமைத்து ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுக்க அது சிறந்த இடமென்று அவர்கள் கருதினர். துரோன்ஹெய்மைக் கைப்பற்ற அதன் வடக்கில் 40 மைல் வடக்கில் அமைந்திருந்த நம்சூசு என்னும் துறைமுகத்தில் கடல்வழியாக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின.
ஏப்ரல் 14ம் தேதி தொடங்கிய இப்படையிறக்கம் பல நாட்கள் தொடர்ந்து நீடித்தது. முதலில் பிரித்தானியப் படைப்பிரிவுகளும் பின்பு பிரெஞ்சுப் படைப்பிரிவுகளும் நம்சூசில் தரையிறங்கின. இவ்வாறு சுமார் 6000 நேச நாட்டுப் படைகள் நம்சூசில் இறக்கப்பட்டன. ஏப்ரல் 19ம் தேதி துரோன்ஹெய்மை நோக்கி முன்னேறத் தொடங்கின. நேச நாட்டு படையிறக்கத்தை அறிந்த ஜெர்மானியத் தளபதிகள் துரோன்ஹெய்மிற்கு கூடுதல் படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தனர். நம்சூசுக்கும் துரோன்ஹெய்மிற்கும் இடைப்பட்ட பகுதியில் இரு படைகளும் மோதிக்கொண்டன. நேச நாட்டுப் படைமுன்னேற்றத்தை ஜெர்மானியர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்திவிட்டனர். தரையில் சண்டை நிகழ்ந்து கொண்டிருந்த போதே ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே நம்சூசு நகர் மீது குண்டுவீசத் தொடங்கியது. இடையறாத குண்டுவீச்சால் அந்நகரின் பெரும் பகுதி அழிந்து போனது. நம்சூசு துறைமுகத்துக்கு தளவாடங்களை ஏற்றி வரும் நேச நாட்டுக் கப்பல்களும் வான்வழித் தாக்குதல்களுக்கு ஆளாகின. நேச நாட்டுத் தரப்பின் வான்படை பலம் குறைவாகவே இருந்தது. நார்வே மற்றும் டென்மார்க்கிலிருந்த விமான ஓடுதளங்களில் பெரும்பாலானவை ஜெர்மானியக் கட்டுப்பாட்டிலிருந்ததால், வடக்கு நார்வே வான்பகுதியில் லுஃப்ட்வாஃபே வான் ஆளுமை நிலையை எட்டியது.
கடுமையான ஜெர்மானிய எதிர்ப்பை மீறி துரோன்ஹெய்மைக் கைப்பற்றுவது இயலாது என்பதை நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்தனர். ஏப்ரல் 28ம் தேதி தாக்குதலைக் கைவிட்டு படைகளைப் காலி செய்ய முடிவு செய்தனர். படைகளைக் காலி செய்ய அனுப்பப்பட்ட நேச நாட்டுக் கப்பல்கள் லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளால் பலமுறை தாக்கப்பட்டன. மே 4ம் தேதி நம்சூசில் தரையிறங்கிய நேச நாட்டுப்படைகள் அனைத்தும் அந்நகரைக் காலி செய்துவிட்டு கடல்வழியாக இங்கிலாந்து திரும்பின.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Steinkjer Encyclopedia: Regiment no. 13 (நோர்வே மொழி)
- ↑ Norwegian army units in 1940 (ஆங்கிலம்)
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் நம்சூசு போர்த்தொடர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.